திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாளான நேற்று காலை தங்க தேரிலும், இரவு குதிரை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் இன்று பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் கோலாகலமாக தொடங்கியது. அன்று முதல், தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்தியான மலையப்பர் பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா விடுமுறை என்பதால் இந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் 8-ம் நாளான நேற்று காலை தங்க தேரில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து இரவு தங்க குதிரையில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் கடைசி வாகனம் என்பதால் மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்து சுவாமியை வழிபட்டனர். மேலும் 441 நடன குழுவினர் 15 குழுக்களாக செயல்பட்டு, மாட வீதிகளில் நடனமாடி அசத்தினர்.
இன்று பிரம்மோற்சவம் நிறைவு: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை திருமலையில் வராக சுவாமி கோயிலின் அருகே உள்ள குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட முகூர்த்த நாழிகையில், சக்கரத்தாழ்வாருக்கு புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போதுஅங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனித நீராடுவர்.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சக்கர ஸ்நான நிகழ்வுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in