சென்னை: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் சென்னை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாறிப்போனார் வாட்சன். 2019-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் பைனலில் காலில் பலத்த காயம் அடைந்து, ரத்தம் வடிந்தாலும் அணிக்காக போராடிய செயலுக்காக வாட்சன் இன்றளவும் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஓய்வுபெற்றுவிட்ட வாட்சன், தற்போது நடந்துவரும் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இதனிடையே, சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்துகாட்டி அசத்தியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் விளம்பரத்தின் ஒரு பகுதியாக நடந்த நேர்காணலில் ‘உங்களுக்கு வேறு ஏதேனும் சிறப்புத் திறமை இருக்கிறதா’ என வாட்சனிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, உடனே அருகில் இருந்த கிட்டாரை எடுத்து ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் புகழ்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை வாசித்துக் காட்டினார். ஷேன் வாட்சன் கிட்டார் வாசிக்கும் இந்த வீடியோ தமிழ் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in