வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காத குணமுடையவர்கள் நீங்கள். நம்பி வந்தவர்களை கைவிடாது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்கள். கடலளவு அன்பு கொண்டவர்களான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் கூடியவர்கள்.
ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு தாழ்வு மனப்பான்மையையும், மன உளைச்சலையும், வீண் கவலைகளையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்வதால் எதிலும் முன்னேற வைப்பார். மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவதால், உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். மனைவியின் ஆரோக்கியம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். பழைய கடன்களில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடி அலைந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். தடைபட்ட கல்வியை மீண்டும் தொடர்வார்கள். பெற்றோர் சொல்லுக்கு மதிப்பு அளித்து திருமணத்துக்கு உடன்படுவார்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வுகள் நீங்கும். சில நேரங்களில் தந்தையுடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவும் உண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு, மனை சேரும். குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் சிறு சிறு விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
வியாபாரத்தில் புது அணுகுமுறை, விளம்பர யுக்தியைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். மருந்து வகை, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினி துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து உடல் சோர்வு, காரியத் தடைகள், மன உளைச்சல், விரக்தி, சோம்பல் என அடுக்கடுக்காக அதிர்ச்சி கொடுத்து வந்த கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். தடுமாறிய உங்கள் பேச்சில் இனி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கோபம் குறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சகோதர – சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் வயிற்று வலி, தலை வலி வந்து நீங்கும். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் மன இறுக்கம் நீங்கும். சிலர் உங்களை விமர்சித்து பேசுவார்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள்.
உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகப் பிரச்சினைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இனி தேடி வரும். இந்த ராகு – கேது மாற்றம் அடிமைபட்டுக் கிடந்த உங்களை ஆவேசமாக செயல்பட வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் நகர மையத்தில் அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். கால் இழந்தவர்க்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
நன்றி
Publisher: www.hindutamil.in