கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்வு இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் நாச்சியார் கோயில் பெருமாள் குறித்து திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களை பாடியுள்ளார். மேலும், இக்கோயில் பெருமாள் புறப்பாட்டின்போது, அக்கோயிலிலுள்ள கல் கருடனை முதலில் 4 பேரும், பின்னர் 8,16 என இறுதியில் 128 பேர் தூக்கிச் செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுக் கடந்த 2022 நவம்பர் 11-ம் தேதி ரூ.1.15 கோடி மதிப்பில் திருப்பணிகளை மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 8 கால யாக சாலை பூஜைகளுக்குப் பின், காலை 9 மணிக்கு ராஜகோபுரம், நடுகோபுரம் மற்றும் மூலவர் விமானம் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9.15 மூலவர் மகா அபிஷேகமும், விசேஷ திருவுருவம், வேத கோஷம், சுற்று முறையும், காலை 10 மணிக்கு யஜமான ஆச்சார்யா மரியாதையும், 10.15 மணிக்கு பொது மக்கள் தரிசனம் நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு பெருமாள் தாயார் புறப்பாடும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோ. கிருஷ்ண குமார், செயல் அலுவலர் பா.பிரபாகரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக நிகழ்வையொட்டி, திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் 150 போலீஸார், 75 ஊர்க் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நன்றி
Publisher: www.hindutamil.in