பிரபு சாலமன் இயக்கிய மைனா, விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
இப்போது அவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் நண்பர் ஜெகத் தேசாய் நடனமாடி, அமலா பாலிடம் காதலை வெளிப்படுத்தினார். அதை ஏற்றுக்கொண்டதும் அவருக்கு மோதிரம் அணிவித்தார். இதன் மூலம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அமலாபாலின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜெகத் தேசாய், இப்போது கோவாவில் வசித்து வருகிறார். இவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in