கொல்கத்தா: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலக கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்ய அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், வெஸ்லி பாரேசி மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்து 68 ரன்கள் விளாச, வெஸ்லி பாரேசி 41 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். அதேபோல் மற்றொரு வீரர் சைப்ரண்ட் 35 ரன்கள் எடுக்க நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பால் வான் மீகெரென் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோரின் பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேச அணியில், மெஹிதி ஹசன் மிராஸ் எடுத்த 35 ரன்களே அந்த அணியின் தனிநபர் அதிகபட்சமாகும்.
இதனால், 42.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேசம். நெதர்லாந்து தரப்பில் பால் வான் மீகெரென் 4 விக்கெட்டும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in