லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.
லக்னோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா, 87 ரன்கள் எடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும் எடுத்திருந்தனர்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வந்தனர். அந்த அணி சார்பில் களத்தில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேனாக இருந்தது லிவிங்ஸ்டன் தான். 46 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். அதிக நேரம் பேட் செய்ததும் அவர் தான். 34.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது அந்த அணி. அதன் மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஷமி 4 விக்கெட்கள், பும்ரா 3 விக்கெட்கள், குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள், ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இவர்கள் நால்வரும் அபாரமாக பந்து வீசி இருந்தனர். சீரான லைன் மற்றும் லெந்தில் பந்து வீசி இருந்தனர். இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in