பாகிஸ்தான் அணி தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் ராஜினாமா – என்ன காரணம்?

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டின் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார்.

53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார். இதனிடையேதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இரண்டாவது முறையாக இன்சமாம் உல் ஹக் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட அவரது தலைமையிலான குழுதான் ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை என இரு தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்தது. இந்த இரு தொடரிலும் பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

குறிப்பாக, தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக மட்டும் வெற்றிபெற்றுள்ளது. தொடர் தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில்தான் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இன்சமாமின் ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது. அதேநேரம், இன்சமாமின் ராஜினாமாவுக்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஏஜென்ட்டாக சொல்லப்படும் தல்ஹா ரெஹ்மானிக்கு சொந்தமான “யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்” என்கிற தனியார் நிறுவனத்தில் இன்சமாம் பங்குதாரராக உள்ளார். இதேநிறுவனம் பாபர் அஸம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முகமது ரிஸ்வான் இந்த நிறுவனத்தின் இணை உரிமையாளர்களில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் முக்கிய வீரர்கள் சிலருக்கும் ஊதியம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐசிசியிடம் இருந்து பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) பெற்ற பணத்தில் ஒரு பங்கை வீரர்களுக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அந்த சமயத்தில் இன்சமாம் வீரர்களிடம் மத்தியஸ்தம் செய்து 48 மணி நேரத்திற்குள் சர்ச்சையைத் தீர்ப்பதாக உறுதியளித்தார். ஆனால் சர்ச்சைகள் தீரவில்லை. பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்ட வீரர்களின் கோரிக்கைகளை பிசிபி ஏற்றுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் இன்சமாமும், ஏஜென்ட் நிறுவனம் திட்டமிட்டு பிரச்சினைகளை எழுப்பியிருக்கலாம் என பாகிஸ்தான் ஊடகங்கள் கூறிவருகின்றன. இதனையடுத்தே இன்சமாம் ராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், “ஏஜென்ட் நிறுவனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என இன்சமாம் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்திவெளியிட்டுள்ளது.

எனினும், சர்ச்சைகள் தீராத நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, அணித் தேர்வு செயல்முறை தொடர்பான ஊடகங்களில் வெளியான முரண்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளது.இந்த குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கும்” என பிசிபி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இன்சமாம் 1991 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். மொத்தமாக 499 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20,580 ரன்கள் குவித்துள்ளார். 35 சதங்கள் இதில் அடங்கும். இந்திய அணிக்கு எதிராக 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,403 ரன்கள் எடுத்துள்ளார். 2003 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *