பெரிய அணிகளுக்கே இல்லாத முதிர்ச்சியுடன் விளையாடும் ஆப்கானிஸ்தான்! – ஒரு பார்வை

அன்று சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 283 ரன்கள் வெற்றி இலக்கை அனாயாசமாக விரட்டி 49 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 286/2 என்று வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது ஆப்கானிஸ்தான். நேற்று கொஞ்சம் கடினமான பிட்சான புனேயில் 242 ரன்கள் இலக்கை அபாரமாக விரட்டி இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இத்தனைக்கும் அந்த அணியின் வெற்றியை தீர்மானிக்கும் ரஹ்மானுல்லா குர்பாஸ் மதுஷங்காவின் அற்புதமான இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு ஆகி டக் அவுட் ஆக வெளியேற பிறகும் அசராமல் ஆடியது ஆப்கானிஸ்தான்.

மிகச்சரியாக ஒருநாள் போட்டியைப் புரிந்து கொண்டு ஆக்ரோஷத்தை கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்தி இரண்டு போட்டிகளிலும் அற்புதமாக வென்றனர். பெரிய அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்ற அணிகளுக்கே இத்தகைய முதிர்ச்சி இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. பெரிய அணிகள் பதற்றத்துடன் இலக்கை அணுகும்போது, சிறிய அணியான ஆப்கானிஸ்தான் பொறுமையாகவும் நிதானமாகவும் இலக்கை அணுகி வெற்றி பெறுகின்றனர்.

காரணம் பெரிய அணிகளிடத்தில் டி20 தன்மை அதிகம் ஊடுருவிவிட்டது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பல்வேறு டி20 லீக்குகளில் ஆடினாலும் இவர்களிடம் டி20 தன்மை ஊடுருவவில்லை என்றே கூற வேண்டும். நேற்று இப்ராஹிம் சத்ரான் 57 பந்துகளில்ல் 39 ரன்கள், ரஹ்மத் ஷா 74 பந்துகளில் 62 ரன்கள், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 74 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 63 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட் என்று அசாத்திய முதிர்ச்சியுடன் ஆடினர். இதன்மூலம் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். மீதமுள்ள 3 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வென்றால் அரையிறுதிக்கு மற்ற அணிகளுடன் மோதும்.

முன்பு ஆப்கானிஸ்தான் அணி தங்கள் ரோல் மாடலாக பாகிஸ்தானின் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாஹித் அஃப்ரீடியைக் கொண்டிருந்தனர். அதனால் அதிரடி ஆடுவது என அடி இல்லையேல் அவுட் என்பது போல் ஆடினர். ஆனால் இப்போது ஆட்டத்தின் தன்மையையும் பிட்சின் போக்கையும் எதிரணியினரின் உத்தியையும் சரியாகக் கணித்து ஆடுகின்றனர். இந்த அணியின் பயிற்சியாளர் முன்னாள் இங்கிலாந்தின் நம்பர் 3 வீரர் ஜானதன் ட்ராட். இவர் பாரம்பரிய டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கான மனநிலையை ஆப்கன் வீரர்களிடம் வளர்த்தெடுத்துள்ளார் என்றே கூற வேண்டும்.

ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் மிடில் ஓவர்களில் ஆடுவதைப் பார்த்தால், அதாவது இடைவெளிகளில் பந்தை அடித்து விட்டு சிங்கிள்ஸ் எடுத்து பிரஷரைக் குறைத்துக் கொள்வதில் ஜானதன் ட்ராட், அஜய் ஜடேஜாவின் தாக்கம் தெரிகிறது. அதேபோல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தாலும் பார்ட்னர்ஷிப்களை கட்டமைப்பதில் செய்வதில் ஆப்கன் வீரர்கள் காட்டும் முனைப்பு டி20 தாக்கம் ஏற்பட்ட பெரிய அணிகளில் அழிந்து வருகிறது என்பதுதான் நிதர்சனம். அன்று வார்னர், ட்ராவிஸ் ஹெட் பார்ட்னர்ஷிப் இல்லையா என்று தோன்றலாம். ஆம், அதுவல்ல பார்ட்னர்ஷிப். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்து லபுஷேன், ஸ்மித் கட்டமைப்பதுதான் பார்ட்னர்ஷிப் என்று கூறுகிறோம். அதைத்தான் ஆப்கானிஸ்தான் செய்கின்றனர். இதனால்தான் நேற்று 131/3 என்ற நிலையில்கூட நிதானத்தை இழக்கவில்லை. நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் காட்டாத முதிர்ச்சியை ஆப்கானிஸ்தான் காட்டினர்.

இலக்கை விரட்டுவதற்கு பயிற்சியாளர் ஜானதன் டிராட்டின் கொடுத்த அறிவுரை இன்னும் அசர வைக்கிறது. “அதாவது எத்தனை பெரிய இலக்காக இருந்தாலும் அதை ஓவர்களுக்கு ஏற்ப சிறிய சிறிய இலக்காக மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் ஓவருக்கு 15-16 என்று அடிக்க வேண்டியதில்லை” என்று டிராட் கூறியதுதான் ஆப்கன் பேட்டர்களின் தாரக மந்திரம். நூர் அகமது அன்று பாகிஸ்தானுக்கு எதிராக அருமையாக வீசி அவர்களை முடக்கி வெற்றியில் பங்களிப்பு செய்திருந்தாலும், இலங்கைக்கு எதிராக அவரை உட்கார வைத்து விட்டு முஜீப் உர் ரஹ்மானை அணியில் எடுத்தார்கள். அதுதான் தன்னம்பிக்கை. ஷர்துல் தாக்கூரை அணியில் எடுத்தது தன்னம்பிக்கையின்பாற்பட்டதல்ல.

ஆப்கானிஸ்தான் என்றால் இன்று மகிழ்ச்சியான ஓய்வறை என்றே பொருள் கொள்ள வேண்டும், ஆம்! அவர்கள் மகிழ்ச்சியாக ஆடுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலுமே இழப்பதற்கு ஒன்றுமில்லை நம் ஆட்டத்தை 150% கொடுப்போம் என்று ஆடுகின்றனர். இதுதான் அவர்களது வெற்றியின் தாரக மந்திரம். பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இருக்கும் வாழ்நாள் குழப்பமெல்லாம் ஆப்கன் அணிக்கு இல்லை என்பதுதான் இந்த முதிர்ச்சிக்குக் காரணம்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *