பெங்களூரு: உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் அவரது பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சேர்க்காததை அடுத்து ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், இந்தத் தொடரில் சில இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். அவர்களில் டேவிட் வில்லியும் ஒருவர். உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இதுவரை ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக லக்னோவில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலியை டக் அவுட் செய்த வில்லி, அதே போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
எனினும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான இங்கிலாந்து வீரர்களில் சென்ட்ரல் ஒப்பந்தத்தில் வில்லியின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில், “ஓய்வு நாள் வருவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. சிறுவயதில் இருந்தே எனது ஒரே கனவு, இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டு என்பதே. எனவே, கவனமாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வுபெறும் நேரம்வந்துவிட்டது. உலகக் கோப்பையில் எங்கள் அணியின் செயல்பாட்டிற்கும் எனது இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என உருக்கமாக ஓய்வு தொடர்பாக வில்லி பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளையும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளையும் வில்லி கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in