லாகூர்: “எவ்வளவு மன அழுத்தம் நாள் வந்தாலும், நாள் முடிவில் நான் முதலில் அழைப்பது அன்ஷாவைதான்” என்று தனது மனைவி குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி அலைஸ் ஷாஹீன் அப்ரிடி, ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 16 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ள ஷாஹீன் அப்ரிடி, இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் தனது மனைவி குறித்து முதல்முறையாக வெளியில் பேசியுள்ளார். ஷாஹீன் அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுன்டர் ஷாஹித் அப்ரிடியின் மருமகன். ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்த ஷாஹீன், சமீபத்தில் அளித்த நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்தும், மனைவி குறித்தும் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில் ஷாஹித் அப்ரிடி மகளை மணமுடித்து எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த ஷாஹீன், “நான்தான் அதற்கு முதல் காரணம். இதை முதலில் தொடங்கியது நானே. ஷாஹித் அப்ரிடியும் எனது அண்ணனும் நீண்ட காலமாக மிக நெருங்கிய நண்பர்கள். இரு குடும்பங்களுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அன்ஷாவை திருமணம் செய்துகொள்ளும் ஆசை எனக்கு இருந்தது. அதை வீட்டில் சொன்னவுடன் எனது அம்மா நேரடியாகச் சென்று பெண் கேட்டார். ஷாஹித் அப்ரிடி இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இரு குடும்பங்களுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.
அன்ஷாவின் சிறந்த குணம், அவர் குடும்பத்தை மதிக்கும் பெண். தனது பெற்றோரையும் சகோதரிகளையும் அவர் அவ்வளவு நேசிக்கிறார். இதுதான் அவரிடம் எனக்கு பிடித்த குணம். ஏனென்றால், இந்த செயல்கள் இப்போதெல்லாம் மிக அரிது. மொபைல் போன்கள் குடும்பங்களுக்கு இடையே ஒரு தூரத்தை உருவாக்கிவிட்டன. மொபைல் போன் தாக்கத்தால் குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதையே நாம் அரிதாகவே பார்க்கிறோம். அப்படியிருக்கையில் அன்ஷா உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, எனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் அவரே. எவ்வளவு மன அழுத்தம் நாள் வந்தாலும், அதைப் போக்குவதற்கு நாள் முடிவில் நான் முதலில் அழைப்பது அன்ஷாவைதான்” என தனது காதல் மனைவி குறித்து உருகியுள்ளார் ஷாஹீன் அப்ரிடி.
நன்றி
Publisher: www.hindutamil.in