புனே: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் பலம்வாய்ந்த நியூஸிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
புனேவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 24 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கமே கொடுத்தார். என்றாலும் மற்றொரு ஓப்பனர் குயிண்டன் டி காக் தனது அபார ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார். அவருடன் வான் டெர் டஸ்ஸன் இணைய இருவரும் சேர்ந்து நியூஸிலாந்தின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். 38 ரன்களுக்கு இணைந்து இக்கூட்டணி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தனர்.
டி காக் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது சதத்தை பதிவு செய்த நிலையில் 114 ரன்களுக்கு அவுட் ஆனார். இதன்பின் வான் டெர் டஸ்ஸன் 133 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டேவிட் மில்லர் 53 ரன்கள் எடுத்து விக்கெட்டானர். இறுதியில் நிர்ணயிக்க 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா. நியூஸிலாந்து சார்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தார்.
358 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணிக்கு இன்றைய நாள் நல்லதாக அமையவில்லை. அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பினர். ஆல் ரவுண்டர் க்ளென் பிலிப்ஸ் மட்டுமே பொறுப்பாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். வில் யங் 33 ரன்களும், டேரில் மிட்செல் 24 ரன்களும் எடுத்தனர். மற்ற 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதில் இரண்டு டக் அவுட்கள் அடக்கம். தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி சிறப்பாக பந்துவீசி நியூஸிலாந்து வீரர்களை சாய்த்தனர். இதனால், 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நியூஸிலாந்து அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
அதேநேரம், 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா நடப்பு தொடரில் 6-வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட், மார்கோ ஜான்சன் 3 விக்கெட், கோட்ஸி 2 விக்கெட் வீழ்த்தினர். புள்ளிப் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in