சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH234’ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நாளை (நவம்பர் 7) வெளியாகிறது. மேலும் கமல்ஹாசன் – மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘KH234’ படத்தின் ப்ரொமோ வீடியோ இன்று மாலை வெளியாகிறது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று மாலை வெளியாக உள்ள ப்ரோமோ வீடியோவுக்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தலை முழுவதும் மூடப்பட்டு கமல்ஹாசனின் கண்கள் மட்டும் தெரியும் வகையில் இடம்பெற்றுள்ள புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் அந்தப் போஸ்டரில் “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளன. இன்று மாலை இப்படத்தின் தலைப்பும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in