வரலாற்றில் முதல் முறை | ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை. முதல் பந்தை சந்திக்க காலதாமதம் செய்ததன் காரணமாக, வங்கதேச முறையீட்டினை அடுத்து நடுவர்களால் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார்.

டைம்டு அவுட்: இந்த விதிமுறையை பொறுத்துவரைக்கும் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பின்போ அல்லது ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினாலோ அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் கிரீஸுக்குள் வர வேண்டும் ஐசிசியின் விதி எண் 40.1.1 கூறுகிறது. இந்த விதிமுறை பிளேயிங் கண்டிஷனைப் பொறுத்து 2 நிமிடங்களாக மாற்றப்படத் தகுந்ததே. அதன்படி, உலகக் கோப்பை போன்ற போட்டிகள் என்றால் அதுவே இரண்டு நிமிடங்களுக்குள் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் வந்து அடுத்த பந்தை சந்திக்க வேண்டும் என்பது விதி. அப்படி வராதப்பட்சத்தில் நடுவர்கள் ‘டைம்டு அவுட்’ எனப்படும் அவுட் வழங்கலாம் என்றும் கூறுகிறது அதே விதி. என்றாலும், இந்த முறையிலான அவுட்டுக்கு பந்துவீச்சாளர்கள் யாருக்கும் எந்த கிரெடிட்டும் வழங்கப்படாது. மாறாக, ரன் அவுட் போல இந்த டைம்டு அவுட் வழங்கப்படும். ஐசிசி வகுத்துள்ள இந்த விதி, நீண்டகாலமாகவே இருந்துவந்தாலும் எந்த அணியின் இதுவரை இந்த விதியை பயன்படுத்தியதில்லை.

நடந்து என்ன? – இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய அதன்படி, இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. சற்றே தடுமாற்றத்துடன் விளையாடிய இலங்கை அணி 24.2 ஓவர்களில் 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரமா அவுட் ஆன பின், இலங்கையின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்க வந்தார். ஆனால், தான் அணிந்துவந்த ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியாக இல்லாததால் அதனுடன் போராடிக்கொண்டிருந்தார் மேத்யூஸ். இதனால் முதல் பந்தை எதிர்கொள்ள தாமதமாக்கினார்.

ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்ஸ் சரிவர வேலை செய்யாததால் மாற்று ஹெல்மெட் வாங்க அணியின் உதவியை நாடிய அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி கேப்டன் அவுட் கேட்டு முறையிட்டதால் டைம்டு அவுட் விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். ஹெல்மெட் ஸ்ட்ராப்ஸ் பிரச்சினை, அதனால்தான் லேட் ஆனது என்றும் அப்பீலை வாபஸ் பெறும்படியும் வங்கதேசகேப்டன் ஷாகிப் அல் ஹசனிடம் மேத்யூஸ் முறையிட்டார். ஆனால் ஷாகிப் அல் ஹசன் ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ எல்லாம் பார்க்காமல் விதிமுறையின் கீழ் அப்பீலை வாபஸ் பெற மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இதனையடுத்து, விரக்தியில் மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் கடும் கோபத்துடனும் பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.

இந்த விதிமுறையின் நீட்சி என்னவெனில் 3 நிமிடங்களுக்கும் மேல் பேட்டர் யாரும் களமிறங்கவில்லை எனில், நடுவர்கள் போட்டியை பவுலிங் செய்யும் அணி வென்றதாகவே அறிவிக்க முடியும். ஆனால், இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அப்படி நடந்ததில்லை. லீக் மட்ட போட்டிகளில் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், அது பற்றிய விவரங்கள் இல்லை. அந்த அடிப்படையில் டைம்டு அவுட் என்ற ஒன்று இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்கிறது.

டைம்டு அவுட் முறையை வங்கதேச கேப்டன் அணுகிய விதத்தை வைத்து அவர்மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. “ஒரு வீரர் ஹெல்மெட் சரியில்லாத காரணத்தினால் தாமதம் செய்ததை அவர் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்று பார்க்க முடியுமா? ஹெல்மெட் சரியில்லாமல் மேத்யூஸ் பவுன்சரில் தலையில் அடி வாங்கி காயமடைய வேண்டுமா” என்று ரசிகர்கள் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *