சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவ.6) வெளியானது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில், அறிமுக வீடியோவை படக்குழு நவ.6 அன்று வெளியிட்டது.
இந்த நிலையில் இந்த அறிமுக வீடியோ 2019ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஸ்டார் வார்ஸ்: ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்’ படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக மீம் ஒன்று வைரலானது. அப்படத்தை பார்க்காதவர்கள் கூட உண்மை என்ன என்று தெரியாமல் அந்த மீமை பகிர்ந்து மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர். ஆனால் இந்த மீம் ‘ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்’ படத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும், ‘ஸ்டார் வார்ஸ்: ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும், ‘அஹ்ஷோகா’ வெப் தொடரிலிருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் எடுத்து அதனை ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக டீசருடன் ஒப்பிட்டு அந்த மீம் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in