துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் 2021 ஏப்ரல் 14 முதல் தரவரிசையில் முதலிடம் வகித்துவந்த நிலையில் தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி கில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். கில் 830 புள்ளிகளும், பாபர் 824 புள்ளிகளும் எடுத்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
இந்த சீசனில் 1,200+ ரன்களை குவித்துள்ள ஷுப்மன் கில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம், இலங்கைக்கு எதிராக எடுத்த 92 ரன்கள் உதவியுடன் மொத்தமாக 219 ரன்கள் குவித்ததன் மூலம் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் சச்சின், தோனி மற்றும் விராட் கோலிக்கு பின் உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கில். இதே பட்டியலில் தற்போது விராட் கோலி நான்காம் இடத்திலும், ரோகித் சர்மா 6வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் மொகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட்கள் வீழ்த்தியன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் சிராஜ். இவரைத் தவிர இந்தியாவின் குல்தீப் யாதவ் 4-ம் இடம், பும்ரா 8-ம் இடம், மொகமது ஷமி 10-ம் இடம் பிடித்துள்ளனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in