புனே: ஏஞ்சலோ மேத்யூஸு செய்யப்பட்டதை போல் தானும் டைம்டு அவுட் செய்யப்படாமல் இருக்க, இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் முதல் பந்தை சந்திக்க கால தாமதம் ஆனதன் காரணமாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். வங்கதேச முறையீட்டினால் வரலாற்றில் முதல்முறையாக டைம்டு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான சர்ச்சைதான் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது. 146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேசத்தின் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியின்போது டைம்டு அவுட் குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 35.2 ஓவர்களுக்கு 192 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. 6-வது விக்கெட்டாக மொயீன் அலி அவுட் ஆனதும், கிறிஸ் வோக்ஸ் களம் புகுந்தார். ஏஞ்சலோ மேத்யூஸுக்கு ஏற்பட்டதுபோல, கிறிஸ் வோக்ஸின் ஹெல்மெட்டிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று ஹெல்மெட் வேண்டி அணியின் சக வீரர்களை கூப்பிடும் முன்பு கள நடுவரிடம் சென்று அதைக் காண்பித்தார். ஏனென்றால், கிறிஸ் வோக்ஸ் களமிறங்கி முதல் பந்தை சந்திக்கும் முன்பாக, குறிப்பாக இரண்டு நிமிடங்களை கடந்துவிட்டதால் மேத்யூஸ் போல தானும் டைம்டு அவுட் செய்யப்படாமல் இருக்க நடுவரிடம் பிரச்சினையான ஹெல்மெட்டை காண்பித்து முறையிட்டார்.
இந்தச் சம்பவத்தின் மைதானத்தில் சிரிப்பலைகள் எழுந்தன. தற்போது, இந்தக் காட்சிகள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன. இப்போட்டியில், கிறிஸ் வோக்ஸ் தனிப்பட்ட முறையில் 51 ரன்கள் எடுத்ததுடன் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் பெற்றார். இதனால், இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in