பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
411 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 2வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. சிராஜ் ஓவரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெஸ்லி பாரேசி கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதன்பின் கொலின் அக்கர்மன் – மேக்ஸ்வெல் ஓ தாவுத் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 66 ரன்கள் இருந்தபோது இந்தக் கூட்டணியை பிரித்தார் குல்தீப் யாதவ். கொலின் அக்கர்மன் 35 ரன்களில் 2-வது விக்கெட்டாக அவுட் ஆனார். சில நிமிடங்களில்
ஜடேஜா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மேக்ஸ் ஓடவுட் 30 ரன்களில் விக்கெட்டானார்.
இந்த ஆட்டத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக விராட் கோலி பந்துவீசினார். தான் வீசிய மூன்றாவது பந்திலேயே நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ரன்களில் வீழ்த்தினார் விராட் கோலி. இதன்பின் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பந்துவீசினாலும் அவர்கள் யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. எனினும், இதன் நெதர்லாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதேநேரம் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45 ரன்கள் எடுத்தார். மிடில் ஓவரில் இறங்கிய இந்திய வம்சாவளி வீரர் தேஜா நிடமானுரு அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்கள் விளாசி அரைசதம் கடந்தார். விராட் கோலி போல் கேப்டன் ரோகித் சர்மாவும் இப்போட்டியில் பந்துவீசினார். ரோகித் ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த தேஜா நிடமானுரு, அவரின் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். தேஜா நிடமானுரு 54 ரன்கள் எடுத்தார்.
இதனால், 47.5 ஓவர்களுக்கு 250 ரன்களுக்கு நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில், பும்ரா, சிராஜ், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இன்னிங்ஸ்: டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா, நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தது. இந்திய பேட்டிங் ஆர்டரின் டாப் ஐந்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அணிக்கு ஓப்பனிங் செய்த ரோகித் சர்மா – ஷுப்மன் கில் கூட்டணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய கில் 51 ரன்களில் முதல் விக்கெட்டாக வெளியேறினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை கடைபிடித்த ரோகித் சர்மா 61 ரன்களிலும், விராட் கோலி 51 ரன்களிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இதன்பின் ஸ்ரேயஸ் ஐயரும், கேஎல் ராகுலும் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.
29வது ஓவரில் இணைந்த இக்கூட்டணி கடைசி ஓவர் வரை நிலைத்து ஆடியது. இருவருமே நெதர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்க இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 46வது ஓவரில் உலகக் கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஸ்ரேயஸ் ஐயர். அதேபோல் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசி 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் கேஎல் ராகுல். என்றாலும் அதே ஓவர் முடிய ஒரு பந்துக்கு முன்னதாக 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ராகுல். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்தது. ஸ்ரேயஸ் ஐயர் இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்து 128 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in