அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது. முன்னதாக வெளியான ‘அகிலன்’ படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தச் சூழலில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘சைரன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – டீசரின் தொடக்கத்திலேயே ஜெயம் ரவி சிறையில் இருப்பதாக காட்டப்படுகிறது. அவர் ஆம்புலன்ஸ் ட்ரைவர் என்பதை பின்னணியில் ஒலிக்கும் கீர்த்தி சுரேஷின் குரல் உறுதி செய்கிறது. ‘கெட்டவன் நல்லவனா நடிக்கிறத பாத்துருக்கேன், ஆனா, நல்லவன் இவ்ளோ நல்லவனா நடிக்கிறத இப்போ தான் பாக்குறேன்’ என கீர்த்தி சுரேஷ் சொல்ல, அதற்கு பதிலுரைக்கும் ஜெயம் ரவி, ‘நீங்கல்லாம் நல்லவனையே நல்லவனா நடிக்க வைச்சுட்டீங்களே’ என்கிறார்.
இதன்மூலம் செய்யாத தவறுக்காக சிறைவாசம் அனுபவிக்கும் ஜெயம் ரவி சிறையிலிருந்து வெளியேறி உண்மையை கண்டறிவதை படம் களமாக கொண்டிருக்கும் என யூகிக்க முடிகிறது. மேலும், அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. கீர்த்தி சுரேஷுக்கு போலீஸ் கதாபாத்திரம் அத்தனை பொருத்தமாக அமையவில்லை என்பதை டீசர் காட்சிகள் வெளிச்சமிடுகின்றன. யோகிபாபு, சமுத்திரகனி ஆகியோர் வந்து செல்கின்றனர். படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | டீசர் வீடியோ:
நன்றி
Publisher: www.hindutamil.in