மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார்.
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று (நவ.12) உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.52.50 கோடியையும், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் ரூ.41.50 கோடியையும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தி சினிமா வரலாற்றில் தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் ‘டைகர் 3’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in