பெங்களூரு: தேவைப்பட்டால் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 5-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா 61, ஷுப்மன் கில் 51, விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 128 ரன்கள் (94 பந்துகள் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல். ராகுல் 102 ரன்கள் (64 பந்துகள், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக தேஜா நிடமனூரு 54 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து லீக் ஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
வெற்றிக்குப் பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: இந்த உலகக் கோப்பை போட்டியில் எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது. லீக் ஆட்டங்கள் 9-லும் சிறப்பாக செயல்பட்டுவிட்டோம். அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
முதலில் களமிறங்கி பெரிய ஸ்கோர் அடித்துவிட்டால் போதும். மற்ற விஷயங்களை நமதுபந்து வீச்சாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்தஅளவுக்கு பந்துவீச்சு துறை பலமிக்கதாக அமைந்துள்ளது. 5 பந்துவீச்சாளர்கள் மட்டும் இருக்கும்போது, கூடுதல் பந்து வீச்சாளர்களை சோதித்து பார்ப்பதும் அவசியமாக உள்ளது. இன்றைய போட்டியில் 9 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.
அடுத்து வரும் அரை இறுதிப் போட்டியை நோக்கி நாங்கள் செல்லவுள்ளோம். நியூஸிலாந்துடனான அரை இறுதிப் போட்டியில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவோம். அரையிறுதி போட்டியிலும் கூடுதல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவீர்களா என்று கேட்கிறீர்கள். தேவைப்பட்டால் 5-க்கும் அதிகமான பந்துவீச்சாளர்கள் அந்தப் போட்டியில் பந்துவீசுவர். இந்த திட்டம் கைகொடுக்கும் என்றால் மட்டும்தான் அதை நாங்கள் செயல்படுத்துவோம்.
அணியில் 5 தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆகையால், தேவைக்கு ஏற்ப மட்டுமே கூடுதல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவர். இதுவே எங்களது திட்டம்.
இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in