2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் சிறிய இலக்கை இந்திய அணி விரட்ட முடியாமல் போய் தோல்வி கண்டது. இறுதியில் இங்கிலாந்து – நியூஸிலாந்து போட்டி இருமுறை ‘டை’ ஆக, பவுண்டரிகள் அதிகம் அடித்த கணக்கில் இங்கிலாந்து சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது.
அனைத்து வடிவங்களிலும் நியூஸிலாந்து இதுவரை இந்திய அணியை 4 நாக் அவுட் போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்தப் புள்ளி விவரம் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் பலவீனத்தையும் நியூஸிலாந்தின் பலத்தையும் காட்டுகிறது. இந்த முறை இதனை முறியடிக்க நிச்சயம் ராகுல் திராவிட் – ரோஹித் கூட்டணி திட்டங்களை வகுத்திருக்கும் என்று நம்புவோமாக.
சர்ச்சைக்குரிய அந்த முடிவு நியூசிலாந்தின் கனவுகளைத் தகர்த்து விட்டது. காரணம், கடந்த 3 உலகக் கோப்பைகளிலும் நியூஸிலாந்து அணி போட்டித் தொடரை நடத்தும் அணியினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறியதே நடந்துள்ளது, எனவே, இந்த முறை அவர்கள் போராட்டம் புதிய தாக்கம் பெறும். இங்குதான் இந்திய அணிக்கு அபாயம் காத்திருக்கிறது. இந்த முறை விட்டு விடக் கூடாது என்பதில் தெள்ளத் தெளிவாக கேன் வில்லியம்சன் படை இறங்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வளவு தூரம் வந்த பிறகு நியூஸிலாந்திடம் தோற்பதா? நடக்காது என்று ரோஹித் படையும் திடமான மனநிலையில் களமிறங்கும் என்பதால் மிகப் பிரமாதமான ஒரு போட்டி காத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்தியா வெல்வதானால் முதலில் டாஸை வெல்ல வேண்டும், இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் உள்ளன. இந்த உலகக் கோப்பையில் வான்கடே மைதானத்தில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 357 ஆகும். சேசிங்கில் 188/9 என்பதே சராசரியாக உள்ளது. ஆனால், இந்த சராசரியை அன்று கிளென் மேக்ஸ்வெலின் டபுள் செஞ்சுரி உடைத்தது. மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் வாழ்விலே ஒருமுறை பாணி இன்னிங்ஸ். அதை வைத்து பெருவாரியான போக்குகளை எடை போட முடியாது.
ஆகவே, இந்திய அணி டாஸ் வெல்வது முக்கியம். விளக்கொளியில் பந்துகள் ஸ்விங் ஆகின்றன. டாஸில் தோல்வி கண்டால் நியூஸிலாந்து அணியின் ஸ்கோர் விகிதத்தைக் கட்டுப்படுத்தும் பந்து வீச்சு, டைட்டான பீல்டிங் ஆகியவை தேவை. சேசிங் செய்யும் போது ஸ்விங் ஆகும் காலக்கட்டத்தில் டெஸ்ட் போட்டி போல் மரபான முறையில் இந்தப் போட்டியில் எச்சரிக்கையுடன் ஆடுவது நலம். இல்லையெனில் முதல் 15 ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து போட்டியை இழக்கும் வாய்ப்பு எந்த அணிக்கும் உள்ளது. கிரிக் இன்போ புள்ளி விவரங்களின் படி வான்கடேயி இந்த உலகக்கோப்பையில் முதல் 15 ஓவர்கள் சேசிங்கின் போது ஸ்விங் ஆகிறது. 20 ஓவர்கள் முடிந்தவுடன் பேட்டிங் வெகு சுலபமாகி விடுகின்றது என்பதைத்தான் அன்று மேக்ஸ்வில் ஆடும்போது பார்த்தோம், பந்துகள் ஒன்றுமே ஆகவில்லை.
2019 இந்திய அணியை விட இந்த இந்திய அணி வலுவானது, அனைத்துப் போட்டிகளிலும் வென்று தன்னம்பிக்கை லெவல் பெரிய அளவில் உள்ளது. எனவே நியூசிலாந்துக்குத்தான் கடினம். நியூசிலாந்தின் பேட்டிங் லைன் அப் நன்றாக உள்ளது, கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சாண்ட்னர் வரை பேட் செய்கின்றனர். சாண்ட்னர் பவுலிங் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். கடந்த உலகக்கோப்பையில் 10 ஓவர்களில் 34 ரன்கள் 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார், இந்த உலகக்கோப்பையிலும் இந்தியாவுக்கு எதிராக அன்ற்ய் 10 ஓவர் 37 ரன்கள் 1 விக்கெட். எனவே அவரது ஓவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா விக்கெட்டை தொடக்கத்தில் சாய்த்து விட்டால் இந்திய அணி கடும் பிரஷருக்குள் செல்வது உறுதி என்பதில் உறுதியாயிருப்பார்கள். முதலில் ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீசுவதை தவிர்க்க வேண்டும், எங்கு, எப்படி போட்டாலும் தூக்கத்தில் எழுப்பி ஆடச்சொன்னால் கூட எகிறு பந்துகளை சிக்சர் விளாசுபவர் அவர். ஆகவே அவரது பலத்தைக் கொண்டு அவரை பரீட்சிக்கக் கூடாது. அவரது பலவீனம் அவுட் ஸ்விங்கர், இன்ஸ்விங்கர் அதில்தான் அவரைச் சோதிக்க வேண்டும், ரோஹித்தை விரைவில் ஆட்டமிழக்கச் செய்து விட்டால் கோலியைக் கட்டிப்போட முடியும் இதுதான் நியூஸிலாந்தின் திட்டமாக இருக்க முடியும்.
இந்திய அணி சீராக ஆடவேண்டியது ட்ரெண்ட் போல்ட் பவுலிங்கில்தான். அவரிடம் அதிக விக்கெட்டுகளைக் கொடுத்தால் திண்டாட்டம்தான். அதே போல் நியூஸிலாந்துக்கு ஷமி, பும்ரா, சிராஜ் ஒரு பெரிய அச்சுறுத்தல் அவரை விட்டால் குல்தீப் யாதவ்.
ஆகவே, நியூஸிலாந்து அணி கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியிலிருந்து ஊக்கம் பெற்றால், இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் ஆடிவரும் ஆக்ரோஷமான அணுகுமுறையில் ஊக்கம் பெற்றுள்ளது, எனவே இரு அணிகளுக்குமே சவால்தான். டாஸ் மிக முக்கியமானது .
நன்றி
Publisher: www.hindutamil.in