மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது 210 ரன்களை கடந்து இந்திய அணி விளையாடி வருகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் – ஷுப்மன் கில் கூட்டணி ஓப்பனிங் செய்தது. போல்ட்டின் முதல் பந்தே 2 ரன்கள் விளாசிய ரோகித், முதல் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புல் ஷாட் சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என அதிரடி காட்டிய ரோகித் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 47 ரன்கள் குவித்தது. ரோகித்தின் அதிரடியை கட்டுப்படுத்த 6வது ஓவரே மிட்செல் சான்டனரை பந்துவீச வைத்தார் நியூஸி கேப்டன் வில்லியம்சன். லெக் ஸ்பின்னில் ரோகித் சற்று தடுமாறுவார் என்பதால் வில்லியம்சன் சான்டனரை வரவழைத்தார்.
அவற்றையும் தவிடுபொடியாக்கும் விதமாக, ஸ்பின்னில் சிறப்பாக செயல்பட்ட ரோகித், தொடர்ந்து இரண்டு பந்துகளில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து சான்டனரை ஒருகை பார்த்தார் ரோகித். முன்னதாக, 4வது ஓவரை வீசிய டிம் சவுதி ஓவரிலும் இதேபோல் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார். விரைவாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு விக்கெட்டானார். இதையடுத்து, விராட் கோலி களம் புகுந்தார். இந்திய அணி 10 ஓவர்களுக்கு 84 ரன்கள் குவித்தது.
ரோகித் சென்ற பின் ஷுப்மன் கில் மட்டையை சுழற்றினார். இதனால், 12.2 ஓவர்களில் ஷுப்மன் கில் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கில்லின் 13வது ஒருநாள் அரைசதம் இதுவாகும். இதன்பின்னர் இருவரும் நிதானமாக விளையாடினர். 79 ரன்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை அணியின் பிசியோ சோதித்து பார்த்தார். பின்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் விளையாடாமல் பெவிலியன் திரும்பினார் கில். அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார்.
கில் சென்ற பிறகு விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 29வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது.
.
நன்றி
Publisher: www.hindutamil.in