உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் அவர், உலக கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை முறியடித்தார். சதம் விளாசிய விராட் கோலி மைதானத்தில் இருந்தபடி சச்சினை நோக்கி தலை வணங்கினார்.
நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இந்த மைல்கல் சாதனையை விராட் கோலி தனது 279-வது இன்னிங்ஸில் நிகழ்த்தி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அதுவும் அவரது சொந்த மைதானத்திலேயே விராட் கோலி நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது.
இதே மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக பேட்டிங் செய்தார். அதே நாளில் தற்போது விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கேலரியில் இருந்த சச்சின் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சச்சின் தனது எக்ஸ் வலைதள பதிவில், “இந்திய வீரர்களின் ஓய்வு அறையில் உங்களை முதன் முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு
மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது. அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சதங்களின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி, அவரது மேலும் ஒரு சாதனையையும் தகர்த்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. அவர், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 673 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி இதுவரை 711 ரன்கள் குவித்துள்ளார்.
.
நன்றி
Publisher: www.hindutamil.in