மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். தனது 13-வது அரை சதத்தை கடந்த ஷுப்மன் கில் 65 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசிய நிலையில் தசைபிடிப்பு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். நிதானமாக விளையாடிய விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 50-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். சீராக ரன்கள் சேர்த்த விராட் கோலி 113 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 70 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசிய நிலையில் டிரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் கே.எல்.ராகுல் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் விளாசினார்.
சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஷுப்மன் கில் மீண்டும் களமிறங்கினார். ஆனால் அவர், மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். 66 பந்துகளை சந்தித்த ஷுப்மன் கில் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 398 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. டேவன் கான்வே (13), ரச்சின் ரவீந்திரா (13) ஆகியோர் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் இதன் பின்னர் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஜோடி அதிரடியாக விளையாடி ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் சேர்த்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது.
வில்லியம்சன் 52 ரன்களில் இருந்த போது பும்ரா பந்தில் கொடுத்த எளிதான கேட்ச்சை மொகமது ஷமி தவறவிட்டார். மட்டையை சுழற்றிய டேரில் மிட்செல் 85 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 6-வது சதமாக அமைந்தது. 3-வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மொகமது ஷமி பிரித்தார். கேன் வில்லியம்சன் 73 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் விளாசிய போது சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆனது.
இதே ஓவரில் டாம் லேதமை ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் ஷமி. 5-வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ் களமிறங்க அடுத்த 6 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 25 ரன்களே சேர்த்தது. 40 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 131 ரன்கள் தேவையாக இருந்தன. மொகமது சிராஜ் வீசிய 41-வது ஓவரில் பிலிப்ஸ் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைக்கப் பெற்றன.
.
அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசையில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய மார்க் சாப்மேன் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அடுத்தடுத்த விக்கெட் சரிவால் தேவையான ரன் விகிதம் அதிகரித்தது. 36 பந்துகளில் 99 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலை உருவானது. சீராக விளையாடி வந்த டேரில் மிட்செல் 119 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாச முயன்ற போது ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது.
அத்துடன் நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை தளர்ந்தது. மிட்செல் சாண்ட்னர் 8 ரன்னில் சிராஜ் பந்தில் வெளியேறினார். டிம் சவுதி 9, லாக்கி பெர்குசன் 6 ரன்களில் மொகமது ஷமி பந்தில் நடையை கட்ட 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணி. இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 9.5 ஓவர்களை வீசி 57 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 1983, 2003 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தது. வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
50 சதங்கள் விளாசி டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்திருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. இந்த மைல்கல் சாதனையை விராட் கோலி தனது 279-வது இன்னிங்ஸில் நிகழ்த்தி உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அதுவும் அவரது சொந்த மைதானத்திலேயே விராட் கோலி நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது. இதே மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக பேட்டிங் செய்தார். அதே நாளில் தற்போது விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சதங்களின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி, அவரது மேலும் ஒரு சாதனையையும் தகர்த்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. அவர், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 673 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி இதுவரை 711 ரன்கள் குவித்துள்ளார்.
‘எனது சாதனையை கோலி முறியடித்ததில் மகிழ்ச்சி’ – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் அவர், உலக கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை முறியடித்தார். சதம் விளாசிய விராட் கோலி மைதானத்தில் இருந்தபடி சச்சினை நோக்கி தலை வணங்கினார். கேலரியில் இருந்த சச்சின் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து சச்சின் தனது எக்ஸ் வலைதள பதிவில், “இந்திய வீரர்களின் ஓய்வு அறையில் உங்களை முதன் முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது. அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே அணியில் 3 பேர் 500: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விராட் கோலி 711, ரோஹித் சர்மா 550, ஸ்ரேயஸ் ஐயர் 526 ரன்கள் வேட்டையாடி உள்ளனர். உலகக் கோப்பை தொடரில் ஒரே அணியை சேர்ந்த 3 வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதன்முறையாகும்.
5-வது சதம்: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சதம் விளாசினார். உலகக் கோப்பை தொடர்களில் இது அவரது 5-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் குமார் சங்ககரா, ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார் விராட் கோலி. இந்த வகை சாதனையில் 7 சதங்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும், சச்சின் 6 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
8 சிக்ஸர்கள்: உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அவர், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த வகையில் இதற்கு முன்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக சவுரவ் கங்குலியும், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக யுவராஜ் சிங் 7 சிக்ஸர்களும் விளாசியதே சாதனையாக இருந்தது.
‘நாக் அவுட்’ விரைவு சதம்: உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில் சதம் விளாசினார். உலகக் கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுவாகும். இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 72 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். இந்த சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் தற்போது முறியடித்துள்ளார்.
4-வது வீரரும் 500 ரன்களும்: உலகக் கோப்பை வரலாற்றில் 4-வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர். நடப்பு தொடரில் அவர், 526 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் 499 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
நன்றி
Publisher: www.hindutamil.in