சென்னை: தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியம் அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் நடிப்பில் கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான படம் ‘டைகர் 3’. கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்புக் காட்சி தீபாவளியன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்துக்குச் சொந்தமான திரையரங்கில் திரையிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கொடுத்தது. அதிலும் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தான் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ‘டைகர் 3’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை. இப்படியான சூழலில், தீபாவளியன்று காலை 7 மணிக்கே முதல் காட்சியை திருப்பூர் சுப்ரமணியம் தனது திரையரங்கில் திரையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கமளிக்க கோரி திருப்பூர் சுப்ரமணியத்துக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக விளக்கமளித்த திருப்பூர் சுப்ரமணியம், “சிறப்புக் காட்சி தொடர்பான தமிழக அரசின் விதிகள் இந்திப் படத்துக்கு பொருந்தாது என நினைத்து காலை சிறப்பு காட்சியை திரையிட்டுவிட்டனர்” என விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பான அவர் அளித்துள்ள விலகல் கடித்தத்தில், “எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவிலியிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in