பியூனஸ் அய்ரஸ்: கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் அந்த அணி தோல்வியே சந்திக்காமல் விளையாடி வந்தது. இந்தச் சூழலில் முதல் முறையாக உலகக் கோப்பைக்கு பிறகு அர்ஜென்டினாவை வீழ்த்தி உள்ளது உருகுவே. அதுவும் தனது சொந்த மண்ணில் இந்த தோல்வியை அர்ஜென்டினா எதிர்கொண்டுள்ளது. கடைசியாக கடந்த 2016-ல் பராகுவே அணி, அர்ஜென்டினாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் தற்போது சர்வதேச கால்பந்து அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் வியாழக்கிழமை உருகுவே மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்தப் போட்டி பியூனஸ் அய்ரஸ் நகரில் உள்ள ‘ல பாம்போனா’ மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது. முறையே 41 மற்றும் 87-வது நிமிடங்களில் கோலி பதிவு செய்தனர் உருகுவே வீரர்கள். ஆட்டத்தின் மொத்த நேரத்தில் சுமார் 64 சதவீத நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அர்ஜென்டினா. ஆனாலும் அந்த அணியால் கோல் பதிவு செய்ய முடியவில்லை. முக்கியமாக மெஸ்ஸி கோல் பதிவு செய்ய தவறினார். மறுபக்கம் தொடக்கம் முதலே களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்ட உருகுவே அணி மேற்கொண்ட கோல் முயற்சிகளில் சக்சஸ் கிடைத்தது. அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மார்செலோ பைல்ஸின் பயிற்சியின் கீழ் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது.
இருப்பினும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. உருகுவே 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஐந்து முறை உலகக் கோப்பை பட்டம் வென்றுள்ள பிரேசில் அந்தி 7 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
நன்றி
Publisher: www.hindutamil.in