“இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவை டாஸ் தீர்மானிக்காது என கருதுகிறேன்” – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்

2023 உலகக் கோப்பையின் உச்சகட்ட மோதல் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக கோலாகலமாக நடைபெறப்போவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், பிட்ச் பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘கவலையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையின் 12-வது போட்டி இந்தியா – பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் நடைபெற்று பாகிஸ்தானின் படுதோல்வியில் முடிந்த அதே பிட்ச்தான் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் அப்போது கோடைகாலம் போல் வெயில் அடித்ததால் பிட்ச் வறண்டிருந்தது. ஆனால் இப்போது கொஞ்சம் குளிர் காலம் எட்டிப்பார்த்திருப்பதால் மாலை நேரம் கொஞ்சம் கூலாக இருக்கும் பனிப்பொழிவும் இருக்கும்.

இந்தப் போட்டிக்கான 5-ம் எண் பிட்ச் நீரூற்றி நீரூற்றி ரோலர் போடப்பட்டுள்ளதாக ஈஎஸ்பின் கிரிக் இன்போ தகவல் கூறுகின்றது. இப்போதைக்குப் பார்த்தால் பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருப்பது போல் தெரியும் என்று பிட்ச் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும், ரோகித் சர்மாவும் பிட்சை நன்கு ஆராய்ந்தனர். பாட் கம்மின்ஸ் இறுதிப் போட்டிக்கு முந்திய செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கொண்ட முதல் கேள்வியே பிட்ச் பற்றியதாகவே இருந்தது.

பிட்ச் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பாட் கம்மின்ஸ், “நான் பிட்சை சரியாகக் கணிக்கக் கூடியவன் இல்லை. ஆனால் கொஞ்சம் உறுதியாக இருப்பது போல் தெரிகிறது. இப்போதுதான் நீரூற்றி ரோல் செய்திருக்கிறார்கள். 24 மணி நேரம் கழித்துத்தான் கூறமுடியும். ஆனால் நல்ல பிட்ச் ஆகத்தான் இருக்கும் என்று தெரிகிறது” என்றார். அடுத்த கேள்வி, “இதே பிட்ச் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிட்சா?” என்று கேட்டதற்கு “ஆம்! பாகிஸ்தான் போட்டி இதே பிட்சில்தான் நடந்தது” என்றார் கமின்ஸ்.

எப்படி இதை கொல்கத்தா பிட்சுடன் ஒப்பிடுகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பாட் கமின்ஸ், “அறிவது கடினம் தான். இங்கு ஹை ஸ்கோரிங் இருந்து வந்துள்ளது. நல்ல பிட்ச்தான், இருந்தாலும் என்ன என்று அறுதியிட்டு கூற முடியவில்லை” என்றார். மேலும் கமின்ஸ் இறுதிப் போட்டி பற்றி கூறுகையில், “ஸ்லோ பந்துகள், பவுன்சர்கள் ஆகியவற்றை தைரியமாகப் பயன்படுத்த வேண்டும். பலவகைப் பந்துவீச்சுக்களுக்கிடையே ஒரு சமநிலையைக் கண்டுப்பிடித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்தியாவில் அந்த சமநிலையை எட்டி விட்டோம் என்றே நினைக்கிறேன். குறிப்பாக இன்னிங்ஸ் முடிவடையும் போது ஸ்லோ பவுன்சர்கள், கட்டர்கள் வேலை செய்கின்றன.

ஹோம் அட்வாண்டேஜ் பற்றி கவலையில்லை, இரு அணிகளுக்கும் ஒரே பிட்ச் தானே. ஆம், நம் நாட்டில் நம்முடைய, நமக்கு பழக்கமான பிட்சில் ஆடுவது சாதகங்கள் நிறைந்ததே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்களும் இங்கு அதிகம் ஆடியிருக்கிறோம். ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம். மற்றெல்லா மைதானங்களை விடவும் இங்கு டாஸ் போட்டியின் முடிவைத் தீர்மானிக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது.

மும்பை மற்றும் பிற பிட்ச்களில் டாஸ் போட்டியின் முடிவை தீர்மானித்ததைப் பார்த்தோம் அகமதாபாத்தில் அப்படியிருக்காது என்றே கருதுகிறேன். ஆனால், எதற்கும் தயாராகவே இருக்கிறோம். மீண்டும் சொல்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம். எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன என்பதைத்தான் இப்போதைக்கு என்னால் உறுதிபடக் கூற முடியும்” என்றார் கமின்ஸ்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *