மும்பை: இன்று நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு மெசேஜ் ஒன்றை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சொல்லியுள்ளார். அவர் இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“இந்த அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இதுவரையிலான நமது செயல்பாட்டுக்கு பின்னால் பல வருட கடின உழைப்பு உள்ளது. சிறு வயதிலிருந்து நாம் கண்ட கனவை மெய்ப்பிக்க இன்னும் ஒரே ஒரு படி தான் உள்ளது. அதை வெற்றிகரமாக கடந்தகால அது சிறப்பானதாக அமையும்.
கோப்பையை நமக்காக மட்டுமல்லாது நமக்கு பின்னால் பக்கபலமாக உள்ள கோடான கோடி மக்களுக்காகவும் ஏந்துவோம். என்றென்றும் அன்புடன் நான் உங்களுடன் இருப்பேன். இப்போது கோப்பையை வென்று வாருங்கள். ஜெய்ஹிந்த்” என பாண்டியா தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து ஹர்திக் விலகினார். அவருக்கு மாற்றாக அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றார். அவர் ஆடும் லெவனில் இல்லாத காரணத்தால் மொகமது ஷமி விளையாடி வருகிறார்.
நன்றி
Publisher: www.hindutamil.in