அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 100 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஷுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அவுட்டாகி உள்ளனர்.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யச் சொல்லி பணித்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். வழக்கம் போலவே ரோகித் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் ஆடிய ஷாட்கள் ஒவ்வொன்றும் ‘அதிருதா நெஞ்சம் அதிரணும்’ ரகம்.
ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கில். தனது பேவரைட் ஷாட்டை ஆட முயன்று அவர் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கோலி, ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்-ட்ரிக் பவுண்டரி விரட்டி அசத்தியிருந்தார்.
மறுபக்கம் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த கேப்டன் ரோகித், மேக்ஸ்வெல் சுழலில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அபாரமாக கேட்ச் பிடித்து ரோகித் சர்மாவை வெளியேற்றினார். அதற்கு முந்தைய இரண்டு பந்துகளில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்திருந்தார். இருந்தும் அடுத்த பந்தே ரோகித் வெளியேறினார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
11-வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார். கம்மின்ஸ் வீசிய லெந்த் பந்தில் முன்வந்து ஆடுவதா அல்லது பின்னிருந்த படியே ஆடுவதா என்ற குழப்பத்தில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்து வெளியேறினார். 16 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. களத்தில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் உள்ளனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in