அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது.
“ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக இல்லை. இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். கூடுதலாக 20 – 30 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோலியும், ராகுலும் சிறப்பான கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், தொடர்ந்து விக்கெட் இழந்த காரணத்தால் அது முடியாமல் போனது. 240 ரன்களை டிஃபென்ட் செய்யும் போது சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்த வேண்டும்.
நாங்கள் அதை செய்ய விரும்பினோம். இருந்தும் ஹெட் – லபுஷேன் இடையில் அமைந்த கூட்டணி அந்த வாய்ப்பை பறித்தது. இரவு நேரத்தில் மின் ஒளிக்கு கீழ் விளையாடும் போது விக்கெட் பேட் செய்ய சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதை காரணமாக சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. பேட் செய்தபோது ரன் குவிக்க தவறினோம். 3 விக்கெட் வீழ்த்தி பவுலர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மேற்கொண்டு ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்திருந்தால் அதன் தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும்” என ரோகித் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 240 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அரைசதம் கடந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.
நன்றி
Publisher: www.hindutamil.in