6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய அணி வீரர்கள்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம் 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, 2 முறை சாம்பியனான இந்தியா எதிர்கொண்டது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய விமானப் படையின் சூரியகிரண் குழுவினர் சாகசங்கள் நிகழ்த்தினர். மைதானத்தின் வான் பரப்பில் அவர்கள் நிகழ்த்திய சாகசம் அனைவரையும் வியக்கச் செய்தது.

தொடர்ந்து டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்தில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் ஷுப்மன் கில் ஏமாற்றம் அளித்தார். ரன் சேர்க்க தடுமாறிய அவர், 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தை மிட் ஆன் திசையில் விளாச முயன்ற போது ஆடம் ஸம்பாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் பந்தில் டிராவிஸ் ஹெட்டின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார். ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக இது அமைந்தது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 9.4 ஓவர்களில் 76 ஆக இருந்தது. ரோஹித் சர்மா அமைத்துக்கொடுத்து வலுவான தொடக்கத்தை இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

ஸ்ரேயஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பேக் ஆஃப் லென்ந்த் பந்தில் எளிதாக விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஷிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். தொடர்ந்து விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் இணைந்தார். இந்த ஜோடி ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 97 பந்துகளில் இந்த ஜோடி ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை.

10-வது ஓவரின் கடைசி பந்தில் அடித்த பவுண்டரிக்கு பின்னர் மேக்ஸ்வெல் வீசிய 27-வது ஓவரின் 2-வது பந்தில்தான் பவுண்டரி அடிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 16 முதல் 26 வரையிலான 11 ஓவர்களில் பந்து வீச்சில் 8 மாற்றங்களை செய்து இந்திய பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது. கே.எல்.ராகுலுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் உடலை குறி வைத்தே வீசினார்கள். இதனால் அவர், ரன்கள் சேர்க்க சிரமப்பட்டார். போதாத குறைக்கு ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சையும் கையாண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கடும் அச்சுறுத்தல் கொடுத்தனர்.

மறுபுறம் சீராக ரன்கள் சேர்த்த விராட் கோலி 63 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை தடுப்பாட்டம் ஆட முயன்றபோது பந்து மட்டையின் உள்பகுதியில் பட்டு போல்டானார். இதன் பின்னர் ஜடேஜா 9 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் வெளியேறினார். படுமந்தமாக விளையாடிய கே.எல்.ராகுல் 107 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் நடையை கட்டினார். முகமது ஷமி 6, ஜஸ்பிரீத் பும்ரா 1, பார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவ் 18, குல்தீப் யாதவ் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

241 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்து சற்று தடுமாறியது. டேவிட் வார்னர் 7 ரன்னில் முகமது ஷமி பந்திலும், மிட்செல் மார்ஷ் (15), ஸ்டீவ் ஸ்மித் (4) ஆகியோர் ஜஸ்பிரீத் பும்ரா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஆனால் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் ஒருமுனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மட்டையை சுழற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் விளாசினார். வெற்றிக்கு இரு ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஹெட் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்கள் சேர்க்க 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. மார்னஷ் லபுஷேன் 110 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆடுகளத்தை சரியாக கணித்து பந்து வீச்சிலும், மட்டை வீச்சிலும் அசத்திய ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆட்ட நாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வானார். தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வானார். பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் கூட்டாக கோப்பையை வழங்கினர். சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையுடன் ரூ.33 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த இந்திய அணி ரூ.16.50 கோடியை பெற்றது. லீக் சுற்றில் 10 ஆட்டங்களிலும் மட்டை வீச்சு, பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் அமர்க்களப்படுத்திய இந்திய அணி இம்முறை எப்படியும் கோப்பையை வென்றுவிடும் என கோடிக் கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் 3-வது முறையாக கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை ஆஸ்திரேலிய அணி கலைத்தது. கடைசி பந்தை வீசிய முகமது சிராஜ் மட்டும் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறவில்லை. கோடிக்கணக்கான ரசிகர்களும் தான்.

கடைசி இடமும்.. சாம்பியனும்.. லீக் சுற்றில் முதல் 2 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் உத்வேகம் பெற்று 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து அரை இறுதியில் நுழைந்தது. லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது போராட்ட குணத்தைவெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் அதை செய்து காட்டியது. தொடரை தடுமாற்றத்துடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்று நிறைவு செய்துள்ளது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *