சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். இன உணர்வு மிக்க ஒரு தமிழன் அவர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (நவ 21) செய்தியாளர்களிடம் சீமான் பேசியவதாவது: “அண்ணன் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் வேண்டுமென்று பேசியிருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் பலபேரின் மனம் காயப்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு போய்விடலாம். என் கட்சியில் வேட்பாளராக நின்று போட்டியிட்டவர் அவர். இன உணர்வு மிக்க ஒரு தமிழன். அவரை எல்லாரும் சேர்ந்துகொண்டு இப்படி செய்யும்போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் என்னால் கருத்து சொல்ல இயலாது. அவர் என்ன பேசினார் என்றே நான் கேட்கவில்லை.
எனக்கு தெரிந்து அவர் யார் மனதையும் காயப்படுத்தும்படி பேசமாட்டார். இயற்கையிலேயே வேடிக்கையாக பேசும் மனிதர் அவர். அதனால் அந்த மாதிரி பேசியிருப்பார். இதனை இவ்வளவு பெரியதாக எடுத்துப் பேச வேண்டுமா என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. விஜய்க்கு ஒரு பிரச்சினை வரும்போது நடிகர் சங்கம் ஏதாவது பேசியிருக்கிறதா? நடிகர் சங்கம் இவ்வளவு நாள் இயங்கியதா என்றே தெரியவில்லை. மகளிர் ஆணையம் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டபோது தலையிட்டதா? மகளிர் ஆணையம் என்ற ஒன்று உயிர்ப்புடன் இருக்கிறதா?” இவ்வாறு சீமான் பேசினார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலி கானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்றும் கூறியிருந்தார். மேலும் மன்சூர் அலி கான் பேச்சுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in