நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக எந்த சீசனிலும் இல்லாத ஒரு ட்விஸ்ட் அறிவிப்பை 51வது நாளில் பிக்பாஸ் வெளியிட்டார். மூன்று பூகம்பங்கள் என்ற அந்த டாஸ்க்கில் தோற்றால் ஏற்கெனவே எவிக்ட் ஆகி சென்ற மூன்று பழைய போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள். அதே போல வீட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதேபோல தங்கள் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் குறித்து போட்டியாளர்கள் பேசும் டாஸ்க்கில் விசித்ரா கூறிய கதை காண்போரை கலங்கடிப்பதாக இருந்தது. சினிமாத் துறையில் பெண்கள் மீதான வன்முறை இந்த சமூக வலைதள காலத்தில் ஓரளவு குறைந்திருந்தாலும், கடந்த காலங்களில் எந்த அளவு தலைவிரித்து ஆடியது என்பதற்கு விசித்ரா கூறிய கதை ஒரு சான்று.
முதல் பூகம்ப டாஸ்க்கில், பல அடுக்குகளை கொண்ட பலகைகளில் பந்தை உருட்டி உருட்டி, கீழே இருக்கும் வாளியில் விழச் செய்ய வேண்டும். இந்த டாஸ்க்கில் முதலில் சென்ற தினேஷ், விஷ்ணு இருவரும் கடைசி வரையில் போராடி தோற்றனர். இந்த போட்டியில் மிக சிறப்பாக ஆடியது மணியும் நிக்சனும். ஐந்துக்கு ஐந்து பந்துகளையும் குறைந்த நேரத்திலேயே வாளியில் போட்டு வெற்றிபெற்றனர். அடுத்து சென்ற விசித்ராவும், அர்ச்சனாவும் ஒரே ஒரு பந்தை மட்டுமே தத்தித் தடுமாறி தோற்றனர். இதனால் முதல் பூகம்ப டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே பொரியல் தனக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என்று ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். இத்தனை நாள் பெரிய பெரிய பஞ்சாயத்துகளில் எல்லாம் தானுண்டு தன்வேலையுண்டு என்று அமைதி காத்தவர் தனக்கு உணவில்லை என்பதால பொங்கி எழுந்தார். பிறகு ‘சோத்துக்காக சண்டை போட வேண்டியிருக்கு’ என்று கூறி பொங்கிப் பொங்கி அழுதார். இந்த அழுகை நீண்ட நேரம் தொடர்ந்தது. கடந்த வாரம் ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கில் எப்போது பார்த்தாலும் அர்ச்சனா அழுவதாக நடித்துக் காட்டியவருக்கு இப்படி ஒரு சோதனையா?
எபிசோடின் கடைசி பகுதியாக, போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்ப தருணங்கள் குறித்து பிக்பாஸ் பேச அழைத்தபோது முதலில் வந்தவர் தினேஷ். தனக்கும் தன்னுடைய முன்னாள் மனைவிக்குமான பிரிவு, அதனைத் தொடர்ந்து தான் எதிர்கொண்ட துயரம் ஆகியவற்றை மிக இயல்பாக கூறிச் சென்றார். இதன் பிறகு பேச வந்த விசித்ரா கூறிய சம்பவங்கள் தான் உண்மையில் இதயத்தை கனக்கச் செய்வதாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் பிரதான நாயகிகளில் ஒருவராக நடிக்க தேர்வானதாகவும், அதில் நடித்த கதாநாயகன் ஒருவர், தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், தான் அதற்கு மறுத்ததால் அந்த படப்பிடிப்பில் நடந்த இன்னல்கள் குறித்தும் கண்கலங்கியவாறு உருக்கமாக கூறினார். இதுவே தான் திரையுலகைவிட்டு வெளியேற காரணம் என்றும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் மீது விசித்ரா போலீஸில் புகார் கொடுத்த செய்தி, ஊடகங்களில் வெளியானது. ஆனால் அப்போது அது குறித்த கண்டனக்குரல்கள் திரையுலகிலிருந்து கூட எழாதது துரதிர்ஷ்டம். இப்போதும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்காமல் இல்லை. சமூக வலைதளங்களின் மூலமாகவே அவற்றில் சில வெளியே தெரிகின்றன. எது பேசினாலும் உடனுக்குடன் சர்ச்சையாகும் இந்த காலகட்டத்தில் கூட தைரியமாக மன்சூர் அலிகான் போன்றோர்களால் பேச முடிகிறது எனும்போது, தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதாக இல்லாத காலத்தில் திரைமறைவில் எத்தகைய சீண்டல்கள் நடைபெற்றிருக்கும் என்பதற்கு விசித்ரா கூறிய சம்பவம் ஒரு பதம்.
அடுத்து வந்த மாயா, தனது அம்மாவுக்கு ஏற்பட்ட ட்யூமர் குறித்தும், அதன்பின் நடந்த சம்பவங்கள் குறித்தும் பேசினார். ஒரு துயரமான சம்பவத்தை வலிந்து திணிக்கப்பட்ட சோகத்துடன் பேசாமல் மிக இயல்பாக ஜாலியாக அவர் பேசியதை ரசிக்க முடிந்தது.
இந்த பூகம்பம் டாஸ்க் மூலம், இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் பூகம்பங்கள் ஏற்படலாம். அது வரப் போகும் போட்டியாளர்களை பொறுத்தது. ஆனால் இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் ஓரிருவரை தவிர மற்றவர்கள் பெரும்பாலும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள். கன்டெண்ட் இல்லாமல் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் வெடிக்கபோவது பூகம்பமா அல்லது புஸ்வானமா என்பதை பார்க்கலாம்.
முந்தைய அத்தியாயம்: கைதட்டல்களால் கலங்கும் பூர்ணிமா இனியாவது ஆட்டத்தை புரிந்துகொள்வாரா?
நன்றி
Publisher: www.hindutamil.in