விசித்ரா சொன்ன அதிர்ச்சி சம்பவம் – சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் நடிகர் பாலகிருஷ்ணா

சென்னை: நடிகை விசித்ரா திரையுலகில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

பிக் பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம் குறித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பேசிய நடிகை விசித்ரா தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அந்த ஹீரோ தன்னைப் பார்த்த உடனேயே பெயரை கூட கேட்காமல் ‘கம் டு மை ரூம்’ என அறைக்கு அழைத்ததாகவும், அடுத்த நாள் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைப் பற்றி சொன்னபோது ஸ்டன்ட் மாஸ்டர் தன்னை கன்னத்தில் அறைந்தது பற்றியும் கண்ணீர் மல்க பேசினார். இதனால்தான், தான் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியதாகவும் அவர் கூறினார். அவர் கூறியது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது.

விசித்ரா பேசுகையில் தன்னை அறைக்கு அழைத்த நடிகர் பெயரும், கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரும் ம்யூட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் விசித்ராவை அறைக்கு அழைத்தது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், அவரை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயர் ஏ.விஜய் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். கடந்த 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘பலேவடிவய்யா பாசு’, (Bhalevadivi Basu). இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் விசித்ராவுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கருத்துகளை பரப்பி வருகின்றனர்.