சென்னை: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கில்லர் கில்லர்’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
பாடல் எப்படி?: ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் பாடலாக உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் வன்முறை டச் இந்தப்பாடலில் ஓங்கி ஒலித்திருக்கிறது. குறிப்பாக “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மலை குவியும். நீ நரியா பதுங்க ரோமம் கிழியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும், கூடி வந்தா பல்லும் உதிரும். சாடி வந்தா சங்கு பிதுங்கும், பறந்து வந்தா எலும்பு உடையும்” போன்ற வரிகள், பாடலிலுமே வன்முறைகளா? என கேட்கும் அளவுக்கு வரிகள் உள்ளன. பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.