மும்பை: “உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி கிடையாது” என இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படும் முதல் தொடர் இது. இதையடுத்து போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமீபத்திய உலகக் கோப்பை தோல்வி குறித்து பேசினார். அப்போது, “உலகக் கோப்பை தோல்வி என்பது தூங்கி எழுந்தால் சரியாகும் வலி கிடையாது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் நடந்த அனைத்தையும் மறந்துவிட முடியாது. சரியாக அதற்கு நேரம் எடுக்கும். இது ஒரு நீண்ட தொடர். அதில் வெற்றி பெறவே விரும்பினோம். தோல்வி கிடைத்ததில் ஏமாற்றம்தான். உலகக் கோப்பைக்கு ஏமாற்றம் குறைய சிறிது காலம் பிடிக்கும். எனினும், நாங்கள் எங்கள் திறமையை மைதானத்தில் வெளிப்படுத்திய விதம் மிகவும் பெருமையாக இருந்தது.” என்று பேசினார்.
முன்னதாக ரோகித் கேப்டன்சி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ரோகித் உலகக் கோப்பையில் செயல்பட்டார். அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நாளை தொடங்கும் டி20 தொடரில் ரோகித்தை போலவே சிறப்பான கேப்டனாக செயல்படுவேன் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.