IPL | இனி இவருக்கு பதில் இவர் – புதிய விதியால் வீரர்களை மாற்றிக்கொண்ட அணிகள்

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும் ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் 19ம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது. இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏலம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அணி நிர்வாகங்களுக்கு வீரர்களை வர்த்தக ரீதியாக மாற்றிக்கொள்வது உட்பட சில சலுகைகளை பிசிசிஐ வழங்கியது.

அந்த சலுகையின்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு வீரர்களை நேரடியாக இடமாற்றிக்கொண்டதாக அறிவித்துள்ளன. அதன்படி, தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும் ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2022ல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆவேஷ் கானை 10 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேவ்தத் படிக்கல்லை 7.75 கோடி ரூபாய்க்கும் விலைக்கு வாங்கின. தற்போது இவ்விரு வீரர்களையும் அதே விலைக்கு வர்த்தக ரீதியாக இடம் மாற்றம் செய்துள்ளன இரு அணிகளும்.

ஆவேஷ் கான் லக்னோ அணிக்காக இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்களும், தேவ்தத் படிக்கல் ராஜஸ்தான் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 637 ரன்களும் எடுத்துள்ளனர்.