துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் 765 ரன்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 791 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஷுப்மன் கில் 826 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம் 824 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை அடைந்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 597 ரன்கள் குவித்திருந்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 28 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் 2 இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் 552 ரன்கள் குவித்த நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை அடைந்துள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 4-வது இடத்திலும் தொடர்கின்றனர். குல்தீப் யாதவ் ஒரு இடத்தை இழந்து 6-வது இடத்தில் உள்ளார்.