ஹைதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் நாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டின் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் மைசூருவில் இன்று தொடங்குகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தப் படம் அடுத்த தீபாவளிக்கு முன்பு வரை ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.
இது பான் இந்தியா படம் என்பதால் தீபாவளிக்கு வெளியிட்டால், வட இந்தியாவில் பெரிய வசூலை அள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பு யோசிப்பதாக கூறுகிறார்கள். இதனால் அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் 2’ படங்கள் அரசியல் பின்னணி கதை என்பதால் 2 பட ரிலீஸுக்கும் இடையில் பெரிய இடைவெளி தேவை என்று தயாரிப்பாளர்கள் நினைப்பதாக கூறுகிறார்கள்.