‘லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கபில் தேவ்!

மும்பை: ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் தனது டப்பிங் பணிகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் நிறைவு செய்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனையொட்டி படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. என்ன நடந்தாலும் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று படக்குழு நேற்று (நவ.22) உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இப்படத்தில் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.