சென்னை: சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு (நவ 22) ‘கங்குவா’ படத்தின் சண்டைகாட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி பிலிம் சிட்டிக்கு சென்ற நசரத்பேட்டை போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.