“எம்.எஸ்.பாஸ்கருடன் பணியாற்ற ஆசை; விரைவில் நடக்கும்” – லோகேஷ் கனகராஜ்

சென்னை: “எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படத்தை நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படம். நடிகர் எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம்.அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

அடுத்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர், “லோகேஷ் கனகராஜ் என்னுடன் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியது மகிழ்ச்சி. கமல், விஜயை இயக்கியுள்ளீர்கள். நீங்கள் கூப்பிடுங்கள் நான் வருகிறேன்” என்றார்.

முன்னதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்துக்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ரஜினி, கமலின் ‘அபூர்வ ராகங்கள்’, விஜய்யின் ‘ப்ரியமுடன்’, அஜித்தின் ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி.படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் சி.எஸ் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.