மும்பை: வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார் ஹர்திக். இதில், 2022-ல் அவர் தலைமையில் பங்கேற்ற முதல் சீசனிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பு ஆண்டும் குஜராத் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார் ஹர்திக். எனினும் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.
இதனிடையே தான் வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹர்திக் திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 19ம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது. இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏலம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அணி நிர்வாகங்களுக்கு வீரர்களை வர்த்தக ரீதியாக மாற்றிக்கொள்வது உட்பட சில சலுகைகளை பிசிசிஐ வழங்கியது. அந்த டிரேடிங் சலுகையின்படி, ஏற்கனவே தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும் ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது இதே டிரேடிங் சலுகையை பயன்படுத்தி குஜராத் அணியில் இருந்து ஹர்திக்கை வாங்கவிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால், இதில் ஒரு சின்ன மாற்றம் செய்யப்படவுள்ளது. ஹர்திக்கிற்கு மாற்று வீரராக யாரையும் அனுப்பாமல் ரூ.15 கோடி கொடுத்து மட்டுமே டிரேடிங் செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது.
பங்கேற்ற இரண்டு சீசன்களில் ஒரு முறை கோப்பையையும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்ற ஹர்திக் பாண்டியாவை குஜராத் நிர்வாகம் விடுவிக்குமா, இந்த திடீர் மாற்றத்துக்கு பின்னணி தகவல் என்ன, அப்படியே குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு சென்றாலும் ஹர்திக் கேப்டனாக செயல்பட முடியுமா என பல கேள்விகள் இந்த தகவலை சுற்றி எழுந்துள்ளன. இவற்றுக்கு அனைத்துக்கும் விடை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே கிடைக்கும். ஆனால், ஒருவேளை இந்த டிரேடிங் வெற்றிகரமாக நடந்தால், ஐபிஎல் வரலாற்றில் இது மிகப்பெரிய வர்த்தகமாக கருதப்படும்.
தற்போது 30 வயதாகும் ஹர்திக் பாண்டியா கடந்த 2015 சீசனில் ஐபிஎல்லில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் 123 போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளை வீழ்த்தி 139.89 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளதோடு, 2309 ரன்களும் எடுத்துள்ளார்.