சென்னை: “எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்? ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க” என ஞானவேல் ராஜாவை இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஞானவேல் ராஜாவுக்கு… அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன் சொல்றேன்னா, அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான். எல்லா பிரச்சினையும் எனக்கு தெரியும்.
ஆறு மாசம் ‘பருத்திவீரன்’ படப்பிடிப்பிலே இருந்துருக்கேன். ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பாத்தது இல்ல. நான்தான் தயாரிப்பாளர், நான்தான் தயாரிப்பாளர்னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விஸ்வாசமும் இல்லாம பேசி இருக்கிறீங்க பிரதர். தப்பில்லையா ?
எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்?. பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு, அவங்களே பேசிக்குவாங்க…அவங்களே தீத்துக்குவாங்க, அப்படின்னு தான் நான் இருந்தேன். ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அண்ணன் இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார். எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார்னு எனக்கு தான் தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க. என்னால தயாரிக்க முடியாது.. பணம் இல்ல அப்படின்னு. சகோதரர் சூர்யா வந்து “படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா” அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்.
அதுக்குப் பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும், அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம் இப்டி வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு. ஆல்மோஸ்ட் அம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம். ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கட்டிங்க. உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்..? சொல்லுங்க. தயாரிப்பாளர் பதவிய அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டுக்கொடுத்தார்…!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அமீர், இயக்குநர் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்போது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைப்பதற்கு சமம்” என பதிவிட்டுள்ளார்.