திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (நவ.25) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை (நவ.26) காலையில் சிறிய வைரத்தேரோட்டமும், மாலையில் மலைமீது மகாதீபமும் ஏற்றப்படுவதால் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கார்த்திகை திருவிழா நவ.18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் காலையில் தங்கச்சப்பரம், மாலையில் பல்வேறு வாகனங்களில் முருகன் தெய்வானையுடன் புறப்பாடாகி அருள்பாலித்தார்.

அதனையொட்டி எட்டாம் திருவிழாவான இன்று பட்டாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் விடையாத்தி சப்பரத்தில் கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பட்டாபிஷேகத்தை முன்னிட்டு மாலையில் உற்சவர் சன்னதியிலிருந்து 6.45 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வனையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

இரவு 7.15 மணிமுதல் 7.45 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தின கிரீடம் சாற்றப்பட்டது. அதன்பின் சுப்பிரமணிய சுவாமி கைகளில் செங்கோலை, நம்பியார் பட்டர் வழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், சேவற்கொடி, வேல் சாற்றி, தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பின் இரவு 8 மணியளவில் தங்கக்குதிரை வானகத்தில் சுவாமி தெய்வானையுடன் திருவீதி உலா எழுந்தருளினர்.

அதனைத்தொடர்ந்து 9-ம் நாளான நாளை (நவ.26ம் தேதி) காலையில் சிறிய வைரத் தேரோட்டம் 7.15 மணியளவில் நடைபெறுகிறது. அதனையொட்டி மாலை 6 மணியளவில் கோயிலுக்குள் பாலதீபம் ஏற்றப்பட்டு, அதனைத்தொடர்ந்து மலைமேல் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன்பின் இரவு 8 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதற்காக மலைமீது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அதற்காக இன்று அதிகாலை 4.30 கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்.

அதனைத்தொடர்ந்து 10-ம் நாள் (நவ.27) தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

'+divToPrint.innerHTML+'