புதுடெல்லி: கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்களுக்கு நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கே சென்று ஆறுதல் சொல்லி இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.
இது குறித்து இந்திய அணி வீரர்கள் சிலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். அது பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் செயலை புகழ்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
“அதிர்ச்சிகரமான தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி டிரெஸ்ஸிங் ரூமில் சந்தித்து ஆறுதல் சொல்லி, உற்சாகப்படுத்தியது மிகவும் அரிதான செயல். தோல்விக்கு பிறகு துவண்டு போன வீரர்களை தேற்ற தனது பிஸியான பணிக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கிய பிரதமரை நான் பார்த்தது கிடையாது. இது நம்பமுடியாத செயல்.
இது மாதிரியான நேரங்களில் ஆறுதல் சொல்ல குடும்ப உறுப்பினர் போன்ற ஒருவர் தேவை. அதை தான் அவர் செய்தார். நிச்சயமாக இது அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட உதவும். குறிப்பாக இந்திய அணி அடுத்த முறையில் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட உற்சாகம் கொடுக்கும்” என சேவாக் தெரிவித்துள்ளார்.