சென்னை: ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை சார்பில் ஷீரடி சாய்பாபாவின் 4 ஆரத்தி பாடல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, `ஆரத்தி சாய்பாபா’ இசைக் குறுந்தகடு சென்னையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
சென்னை ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் இசைக் குறுந்தகடை சாய் பல்கலை. நிறுவனரும்,வேந்தருமான கே.வி.ரமணி வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர்டி.ஜி.தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இதில் கே.வி. ரமணி பேசும்போது, “பாபா என்றும் கொடுப்பவராக இருக்கிறார். நாம் அவரிடமிருந்து பெறுபவர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு பக்தருக்கும் பாபாவின் கருணை தனித்தன்மையுடன் இருக்கும். சோதனைகளை அளித்தாலும், தாயுள்ளத்துடன் நம்மை துயரில் இருந்து அவரே காப்பாற்றுவார்” என்றார்.
ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை அறங்காவலர் டி.கிருஷ்ணகுமார், மராத்தியில் காலம்காலமாகப் பாடப்படும் ஆரத்திப் பாடலை தமிழில் கொண்டுவந்ததன் அவசியத்தை விளக்கினார். அவர் பேசியதாவது:
பாமரருக்கும் புரியும்… ராதாகிருஷ்ண சுவாமிஜியின் மீதும், சாய்பாபாவின் மீதும் எங்கள் குடும்பத்தினருக்கு இருக்கும் பக்தியின் வெளிப்பாட்டை சமூக நலத்துடன் அணுகுவதற்காகவே இந்த அறக்கட்டளையைத் தொடங்கினோம்.
தமிழில் நிறைய ஆரத்திப் பாடல்களைக் கேட்டேன். எதுவும் என் மனதை தொடவில்லை. அதனால் மராத்தி மொழியில் பாடப்படும் ஆரத்திப் பாடல்களை, சாதாரண பாமரருக்கும் புரியும் வகையில், தமிழில் அதன் அர்த்தமும், பெருமையும் மாறாமல் கொண்டுசேர்க்க வேண்டும் என்று கருதினோம்.
பொய்யாமணி சாய் மந்திரில் வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை நடந்தது. அவர் பாடிய பாடல்கள் உருக்கமாக இருந்தன.
எனவே, அவரிடமே ஆரத்திப் பாடல்களை, அதன் தொன்மை மாறாத மெட்டில் தமிழில் எழுதிப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரின் மகன் அபிஷேக் ராஜு இசையில், வீரமணிராஜு குழுவினர் பாடியிருக்கும் பாடல்களை வெளியிட்டுள்ளோம். இந்தப் பாடல்களை அனைவரும், தங்கு தடையின்றிப் பாடுவதற்கு ஏற்ப 4 ஆரத்திப் பாடல்களையும் புத்தகமாகவும் அச்சிட்டு வழங்குகிறோம். இந்தப் பாடல்களை அனைவரும் கேட்டு, சாய்பாபாவின் அருளைப் பெறுவதற்கு வசதியாக யூடியூப் அலைவரிசையிலும் (Ungal Sai Baba Poyyamaniyil) வெளியிட இருக்கிறோம்.” என்றார்.
காலை ஆரத்திப் பாடல்களை ராம் காஷ்யபும், மதியம், மாலை, இரவு ஆரத்திப் பாடல்களை ஹரிராம்குமாரும் எழுதியுள்ளனர். வீரமணி ராஜு, அபிஷேக் ராஜு, சுர்முகி ராமன், சவுமியா அபிஷேக் ராஜு, சாய் சமர்த் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
விழாவில், ராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளையின் அறங்காவலரின் தாத்தாவும், பிரபல பத்திரிகையாளருமான ரங்கசாமி பார்த்தசாரதி எழுதிய, ஷீரடி சாய் பாபாவின் வாழ்க்கையை விளக்கும் ‘God Who Walked on Earth’, ராதாகிருஷ்ண சுவாமிஜியின் சுயசரிதையை உள்ளடக்கிய ‘Apostle of Love’ ஆகிய நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.