திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். முன்னதாக இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் காண வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவங்கள் நடைபெற்றன.
மூலவர் சந்நிதியில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 17-ம் தேதி அதிகாலை கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. 7-ம் நாள் உற்சவமான வெள்ளிக்கிழமை ‘மகா தேரோட்டம்’ நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை ஏற்றப்பட உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பட்டுள்ளன. இந்த மகாதீப விழாவில், சுமார் 35 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவர்களுக்கு கையில் அடையாளப் பட்டை: மகாதீபத்தைக் காண வரும் கூட்டத்தில் சிக்கி சிறுவர்கள் காணாமல் போனால், அவர்களின் பெற்றொரை உடனடியாக கண்டறியும் வகையில், சிறுவர்கள் கையில், பெற்றோரின் தொலைபேசி எண், காவல்துறையினரின் உதவி எண்கள் எழுதப்பட்டு, அந்த அடையாளப்பட்டையை மகாதீபம் காண வரும் சிறுவர்களின் கைகளில் அணிவிக்கப்படுகிறது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது தொடர்பான அறிவுரைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். 14,000 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
600-க்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமிராக்கள்: இன்று காலை பரணி தீபம் வெகு விமரிசையாக ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வலர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், 20-க்கும் மேற்பட்ட மருத்தவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
2500 பேருக்கு அனுமதி: மலை மீது ஏறிசென்று மகாதீபத்தைக் காண 2500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிச்சீட்டைப்பெற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மூவர் மயக்கம் அடைந்தனர். மேலும், அனுமதிச்சீட்டு வழங்கப்படும் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.
மழையில் கிரிவலம்: இன்று பிற்பகல் திருவண்ணாமலையில் மழை பெய்தது. எனினும், மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தவாறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகாதீபம் காண வந்துள்ள பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.