கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலில் இருந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் ஐம்பொன் சிலை 67 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஊர் பொதுமக்கள் திரண்டு மேளதாளத்துடன் வரவேற்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சிவகுருநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 11-ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை கடந்த 1956-ம் ஆண்டு காணாமல் போனது. இதையடுத்து 1969-ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் வாரிய செயலாளர், நாச்சியார்கோயில் போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் சர்வதேச போலீஸார் உதவியுடன் அமொரிக்கா நாட்டின் நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் சிவபுரம் நடராஜர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு 1988-ம் ஆண்டு நடராஜர் சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் பாதுகாப்பு நலன் கருதி திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிவபுரம் கிராம மக்கள் கோயில் நிர்வாகம் சார்பில், திருவாரூர் உலோக திருமனேிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிவபுரம் நடராஜர் சிலையை வழிபாட்டுக்காக எடுத்துவர அனுமதி வழங்கவேண்டும் என்று கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா, கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது நடராஜர் சிலையும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வழக்கை திங்கள்கிழமை காலை விசாரித்த நீதிபதி திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலின் ஐம்பொன் நடராஜர், விநாயகர் சிலைகளை, சிவபுரம் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்காக வைக்கவும், வழிபாடு முடிந்த பிறகு பாதுகாப்பு நலன் கருதி மீண்டும் கும்பகோணம் நாகேஸ்வரன் சுவாமி கோயிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிவபுரம் கிராமமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு 67 ஆண்டுகளுக்கு பிறகு 11ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் நடராஜர் சிலையை கிராமத்துக்குள் ஊர்வலமாக மேள தாளத்துடன் எடுத்து சென்று, சிவகுருநாதர் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அப்போது நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in